அசைவம் சாப்பிடுதல் உடலிற்கு நல்லதா கெட்டதா?

அசைவம் உடலிற்கு நல்லதா கெட்டதா? சாப்பிடலாமா கூடாதா? என்ற சந்தேகங்கள் மக்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. அதற்கான விடயங்கள் இப்பதிவில் காணலாம்.

உள்ளடங்கிய துணை தலைப்புகள்:

  • அசைவத்தின் ஆற்றல்
  • அசைவம் சாப்பிடுவதில் கட்டுப்பாடும் முறையும்
  • கோழி இறைச்சி
  • மீன்
  • இறைச்சி வாங்குவதில் கவனம்

அசைவத்தின் ஆற்றல்:

non-vegetarian good or bad for health

அசைவம் சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுவதில் ஓர் கட்டுப்பாட்டு முறையினை பின்பற்றும் பொழுது நம் உடலுக்கு நன்மையே பயக்குகிறது.

காய் கனி போன்ற சைவத்திலிருந்து உடலிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். ஆனால் ஒரு சில சத்துக்கள் அசைவத்திலிருந்து எளிமையாக உடலிற்கு கிடைத்துவிடும்.

உதாரணத்திற்கு, 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோகிராம் இரும்புச்சத்து இருக்கிறது. அதே எடையுள்ள 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச்சத்து உண்டு. அதனால், அசைவம் சாப்பிடுவது வீண் என்று கூற முடியாது.

அசைவம் சாப்பிடுவதில் கட்டுப்பாடும் முறையும் : 

உடல் தகுதிக்கேற்ற அளவு:

கல்லுடைப்பவர்கள் சாப்பிடும் அளவினை, கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் சாப்பிட்டால் சரி வராது. ஏனென்றால் கல்லுடைப்பவர்கள் தங்கள் உடல் பலத்தினை கொண்டு வேலை செய்பவர்கள். உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்தை பொறுத்து நாம் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு.

வாரத்திற்கு ஒரு நாள்:

ஆறு நபர்கள் கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் ஒரு கிலோ கோழிக்கறி அல்லது அரை கிலோ ஆட்டு இறைச்சி அல்லது ஒரு கிலோ மீன் சாப்பிட்டால் போதுமானது.

உணவில் இடம் பெற வேண்டியவை :

அசைவ உணவில் கண்டிப்பாக இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு ஆகியவைகளை சேர்த்து கொண்டால், இறைச்சியிலிருந்து கிடைக்கக்கூடிய நல்ல சத்துக்கள் முழுமையாக உடலிற்கு கிடைக்கும்.

அசைவம் சாப்பிட்ட மறுநாள்:

அசைவம் சாப்பிட்ட மறுநாள் சோறு, கொள்ளு ரசம், இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய உணவினை முடித்தல் நல்லது. கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் குணத்தை கொண்டது. இவை உடலில் தேவை இல்லாத கொழுப்புகளை வெளியேற்றுவதால், அசைவம் சாப்பிடுவதினால் ஏற்படும் உடல் பருமன் பிரச்னையை அண்ட விடாது.

சைவத்திற்கு இடம் கொடுத்தல்:

மற்ற நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுத்து சைவ உணவு சாப்பிடுதல் நல்லது.



வயிற்றிற்கு ஓய்வு:

வாரத்தில் ஒரு நாள் குறைந்தது ஒரு வேளையாவது உணவு மண்டலத்திற்கு (வயிற்றுக்கு) ஓய்வு கொடுத்து விரதம் இருத்தல் உடலிற்கு நல்லது.

ஹோட்டல்களில் கிடைக்கும் அசைவ உணவினை தவிர்ப்பது நல்லது. காரணம், இறைச்சியில் சுவை மேம்படுவதற்காக அவற்றில் ரசாயனப் பொருட்களும், ரசாயன உப்புகளும் கலக்கப்படுகின்றன. குறிப்பாக, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் மோனோ சோடியம் குளூட்டமேட், சோடியம் நைட்ரேட் ஆகியவை கலந்திருக்கின்றன. 

கோழி இறைச்சி:

நாட்டு கோழி:

கோழி நல்ல சுவையுள்ள அசைவ உணவு. ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்பட்ட நாட்டு கோழி இறைச்சியில் வைட்டமின் பி 12 சத்து அதிகம். இது உடலிற்கு சூட்டைத்தந்து, இருமல், சாதாரண சளி, மந்தம் ஆகியவற்றைப் போக்க கூடியது. மேலும் உடல் தாதுவை வலுப்படுத்தி, ஆண்மையைப் பெருக்கக்கூடியது.

பிராய்லர் கோழி:

பிராய்லர் கோழி இறைச்சியும், அதன் முட்டையும் உடலிற்கு நல்லதல்ல. இதனை தொடர்ந்து உட்கொள்ளும் சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே பூப்படையும் பிரச்னையும், ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மீன்:

மீன்கள் நல்ல ஊட்ட சத்துகள் நிறைத்த உணவு. கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் உள்ள ஊட்ட உணவு.

கடல் மீன்களில் ‘இ.பி.ஏ.’ (இசோசாபெண்டனொய்க் அமிலம்), ‘டி.ஹெச்.ஏ.’ (டோகோசாஹெக்சேனாய்க் அமிலம்) எனும் இரண்டு ‘ஒமேகா 3’ அமிலங்கள்  உண்டு. நம் உடம்பானது இந்த இரண்டு அமிலங்களை உற்பத்தி செய்வது இல்லை. தாவரங்களிலும் சில வகை எண்ணெய் வித்துக்களைத் தவிர, இது பெரிதாகக் காணப்படுவது இல்லை. இந்த இரண்டு வகை  அமிலங்கள்  மூளைத் திறனைத் தூண்டவும், புற்றுநோய் மற்றும்  மாரடைப்பைத் தடுக்கவும் உதவுகிறது.

ஆனால், அந்தப் புரதத்தையும், இதயத்துக்கு நல்லது சேர்க்கும் சத்துக்களையும் முழுமையாகப் பெற, மீனை வேக வைத்து சாப்பிட வேண்டும். மீனை பொரித்தோ அல்லது வறுத்தோ சாப்பிட்டால் அச்சத்துக்கள் உடலிற்கு கிடைப்பதில்லை.

இறைச்சி வாங்குவதில் கவனம்:

எந்த இறைச்சியாக இருந்தாலும், அசைவ உணவுகள் விரைவில் கெட்டுப்போகும் இயல்புடையவை. இறைச்சி கடைகளில், ஆடோ, மீனோ, கோழியோ அதன் தோலும் குடலும் முழுமையாக நீக்கப்பட்டவுடன், விரைவாக வீட்டிற்கு சென்று சமைக்க ஆரம்பிப்பது நல்லது. 

பன்னாட்டு கோழி, ஆட்டுக்கறி உணவகங்களில் இறைச்சி துண்டுகள் பலமணி  நேரம் கழித்தோ அல்லது சில நாட்கள் கழித்தோ வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  எனவே, அசைவ உணவு சாப்பிடவேண்டும் என்றால்  இறைச்சியை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்த  பிறகு சமைத்துச் சாப்பிடுங்கள்.

அசைவம் நல்லதுதான். ஆனால் அளவாகச் சாப்பிடுங்கள்! அளவுக்கு மீறினால் அமிர்தமும் நெஞ்சே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *