கொசு, ஓர் திறமைசாலி!

“கொசுகு” என்ற பழஞ்சொல் காலப்போக்கில் “கொசு” என்று திரிந்து, தமிழகம் எங்கும் வழக்கத்தில் உள்ளது. சில இடங்களில் “சுள்ளான்’ என்றும் வழக்கத்தில் உள்ளது.

இன்னும் சில இடங்களில் இரண்டையும் வேறுபடுத்தி மிகச் சிறிய உருவில் உள்ளனவற்றைக் “கொசு” என்றும், வலிக்கும் அளவுக்குக் கடிக்கும் அதே இனத்தைச் “சுள்ளான்” என்றும் வழங்குகின்றனர். இலங்கையில் கொசுவை “நுளம்பு’ என்று வழங்குகின்றனர்.

உள்ளடங்கிய துணை தலைப்புகள்:

  • கொசுக்கள்
  • கொசுவின் உடலமைப்பு
  • கடிக்கும் விதம்
  • கொசுக்களின் ஆற்றல்
  • கொசுக்களின் ஆயுட் காலம்
  • அழிவில்லா கொசுக்கள்

கொசுக்கள்:

Mosquito Skills

கொசுக்களில் ஏறத்தாழ 3,000 சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் சில இனங்களே நோய் பரப்புகிறவை.

ஆண் கொசு, மனித மற்றும் விலங்கின் இரத்தத்தை உறுஞ்சுவது இல்லை. அதற்கு தேவைப்படும் அனைத்து உணவுகளும், மலரின் தேன் மற்றும் தாவரங்களிலிருந்து கிடைகின்றன.

பெண் கொசுக்கள், மனித இரத்தத்தையே முக்கிய ஆதாரமாகக் கொண்டு உயிர் வாழ்கிறது. மனித இரத்தத்தில், கொசு முட்டை உருவாவதற்கு தேவையான எண்ணெய், வெண்புரதம் மற்றும் இதர ஊட்டச் சத்துப் பொருட்கள் இடம்பெறுகின்றன. மற்ற நேரத்தில், ஆண் கொசு போல், அவை மலரின் தேன் மற்றும் தாரவங்களின் சாற்றை மட்டுமே உண்ணுகின்றன.

உண்மையில், கொசு எல்லோரையும் கடிப்பதில்லை. அவரவர் மூச்சில் வெளிப்படும் கரியமில வாயுவின் அளவு, சுவாசத்தின் எண்ணிக்கை மற்றும் மணம் போன்றவை கொசுவுக்கு உவப்பாக இல்லாவிட்டால் அது கடிப்பதில்லை.

பெண் கொசுக்களுக்குக்கூட ரத்தம் முதன்மையான உணவல்ல. ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபட்ட பிறகு, முட்டைகளை உருவாக்க மனித இரத்தத்தில் உள்ள புரோட்டின் அதற்குத் தேவைப்படுவதால், அதைக் கொண்டு, அவை தன்னுள் முட்டையை உருவாக்கிக் கொள்கிறது.

ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப ரத்தத்தைக் குடித்துவிட்டால், அதன் சந்ததிகளின் 25 தலைமுறைகளுக்குத் தேவையான புரதம் கிடைத்துவிடுகிறது.

எயிட்ஸ் நோயாளிகளின் இரத்தத்தைக் குடிக்கும் கொசு செத்து மடியாது. காரணம், எய்ட்ஸ் நோயாளியின் ரத்தத்தில் உள்ள வைரஸ் கிருமிகளை, கொசுவின் குடல் ஜீரணித்து ஏற்றுக் கொள்கின்றன.

வீடுகளிலுள்ள கொசுக்கள், தாம் பிறந்த இடத்திலிருந்து சுமார் ஆயிரம் அடி தொலைவுக்குள்ளேயே சுற்றுகின்றன. மணிக்கு ஒன்றரை மைல் வேகத்தில் பறக்கக் கூடியது.

கொசுக்களில், உப்பு நீரில் இனப்பெருக்கம் செய்கிற ஒரு வகை கொசு,, கடற்கரை ஓரமுள்ள நீர்நிலைகளில் வசிக்கும். அவை மனிதர்களையும் விலங்குகளையும் தேடி, 50 முதல் 65 மைல் தொலைவுக்குக்கூடப் பயணம் செய்யும் திறன் கொண்டவை.

கொசுவின் உடலமைப்பு:

கொசுக்களின் முகங்களின் பெரும்பகுதியைக் கண்களே ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.

பெண் கொசுவின் பாதங்களில் மடிப்புகளும் கொக்கியிழைகளும் உள்ளன. பலமான காற்றடித்தாலும் அது பிடியை விடாது.

கொசுவின் உணர்வறி உறுப்புக்களில், மணங்களையும் வேதிப் பொருட்களையும் உணர்வதற்காக 70க்கு அதிகமான பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

மக்கள் உடலிலிருந்து நுகரும் வேதி மணத்தை நாடும் திறமை பெண் கொசுவுக்கு மிகவும் வலிமையாக உள்ளது.

மூக்கில் தேடல் முனைகளும், துளையிடு முனைகளும் உண்டு. ஒரு துளையிடு முனை உள்ளீடற்ற குழலாக இருக்கும். அது ‘ஆக்கர்’கருவியைப் போல, எவ்வளவு கடினமான தோலையும் துளைத்து ரத்தத்தை உறிஞ்ச உதவும்.

கடிக்கும் விதம்:

கொசு, தான் உட்காரும் இடத்திலுள்ள தோலில் துளையிட்டவுடன், வலியை மரத்துப்போகச் செய்யும் ஒரு திரவத்தை உமிழ்கிறது. அத்துடன் அந்தத் திரவம் ரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து நீர்த்துப் போகவும் வைக்கிறது. அது, கொசுவின் மிக நுண்ணிய உறிஞ்சு குழலில் ரத்தம் உறைந்து அடைத்துக்கொள்ளாமல் தடுக்கும். உறிஞ்சு குழலின் தலைமுனையில் சுருங்கி விரியும் ஒரு குமிழ் உள்ளது. அது சுருங்கும்போது ரத்தம் கொசுவின் உடலுக்குள் பாய்கிறது. விரியும்போது கடிபடும் மனித அல்லது விலங்கின் ரத்தம் கொசுவின் உறிஞ்சு குழலின் உள்ளே பாய்கிறது.

கொசுக்களின் ஆற்றல்:

மக்கள் வெளிவிடும் மூச்சு காற்றையும் மனித உடலின் மணத்தையும், கொசுக்கள் அவற்றின் உணர்வறி உறுப்புக்கள் மூலம் உணர்ந்துக் கொள்கின்றன. இந்த உணர்வறி உறுப்புக்கள் நுற்றுக்கு மேலான அடி தொலைதூரத்தில் இருந்து கூட, கரியமில வாயு உள்ளிட்ட கரிம பொருள் ஆதாயங்களையும் உணர்ந்து கொண்டு, இலக்கை உறுதிப்படுத்தி கண்டறிய முடியும்.

ஆண் கொசுக்களின் காதுகளில் பாலுணர்வைத் தூண்டும் செல்கள் உள்ளது, அதன் மூலமாக தங்களை கடந்து செல்லும் பெண் கொசுக்களுடன் இரண்டொரு விநாடிகளில் கூடிக் கலவி செய்து இனப்பெருக்கம் செய்யக் கூடிய திறன் கொண்டவை.

பெண் கொசுக்கள் தன் சிறகை சராசரியாக நொடிக்கு 500 முறை அசைகின்றது. அதனால் உண்டாகும் ஒலியானது ஆண் கொசுக்களை கவர்கின்றன.

கொசுக்களின் ஆயுட் காலம்:

ஆண் கொசு சராசரியாக ஒரு வாரம்தான் வாழும். அது முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடனேயே பெண் கொசுக்களுடன் உறவு கொள்கிறது. அது முடிந்ததும் ஏதாவது ஒரு செடியின் இலையில் அமர்ந்து சாற்றைக் குடித்துக்கொண்டு காலம் கழிக்கிறது.

பெண் கொசு அதிகபட்சமாக ஒரு மாதமே உயிருடன் இருக்கும். அதற்குள் அது கருத்தரித்து ஏதாவது ஒரு நீர்நிலையில் முட்டையிட்டுவிட வேண்டும். அது நிறைவேறுவதற்கு முன் குளிர்காலம் வந்துவிட்டால், ஏதாவது ஓர் இடுக்கில் நீள்துயிலில் ஆழும். அது நான்கைந்து மாதங்கள்கூட நீடிக்கலாம். முட்டையிட உகந்த காலம் வந்ததும் அது விழித்துக்கொண்டு முட்டையிடப் போகும்.

அழிவில்லா கொசுக்கள்:

ஒரு சமயத்தில், சராசரியாக நூறு முட்டைகளை இடும். இந்த வேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது. எனவே, கொசுக்களை அழிப்பது தவிர்க்க முடியாதது.

கனடா நாட்டில் உள்ள “கோமர்னோ, மானிடோபா” என்ற பகுதியைக் கொசுக்களின் தலைநகரம் என்று அழைக்கிறார்கள். இங்கு கொசுவின் பிரமாண்ட சிலை ஒன்று நிறுவியிருக்கிறார்கள். உலகின் மிகப் பெரிய கொசு சிலை இதுவே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *