உடல் ஒரு காற்றடைத்த பை

நமது உடம்பை “வெறும் காற்றடைத்த பை” என்று முன்னோர்கள் குறிப்பிடுவது உண்டு. காற்று என்பது உயிரையும், பை என்பது உடலையும் குறிக்கும்! முடிந்தளவு காற்றை எப்படி பையினுள்ளே தங்க வைப்பது மற்றும் பையில் ஆங்காங்கே ஓட்டை விழாமல், எப்படி முயற்சி செய்து காற்றை தங்க வைப்பது என்பதே நமது முதல் நோக்காக இருக்கட்டும்.

கடந்த வாழ் நாட்களை, மனதில் அசைபோட்டு மரத்தடியில் மகிழ்ந்து அமர்ந்திருந்த, 90 வயத்தை நெருங்கி கொண்டிருக்கும் ஒரு முதியவரை கிராம புரத்திலே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்தனை வயதிலும் அவர் மனதில் கொண்ட வலிமை சற்றே வியப்பளித்தது.

“இப்பொழுது என்னிடம் செல்வமும், வசதியும் இல்லை. அவ்வப்பொழுது இடையிடையே துக்கம், வறுமை, துன்பம், கொடுமை, பகைமை, வெற்றி, தோல்விகள் என்னை தழுவிருக்கின்றன. எனக்கு நேர்ந்திட்ட கஷ்டங்களையும், துரோகங்களை  எல்லாம் மறந்து விட்டு நிம்மதியாய் தூங்குகின்றேன். உடலிலும் மனதிலும் வலிகள் மறைந்து விடுகின்றன. உடலில் உள்ள பாகங்கள் எவ்வித அழுத்தமுமின்றி நன்றாக செயல்படுகின்றன.

கொடுமை செய்தவர்களை  மன்னித்தும் விடுகிறேன். அவர்களை நினைப்பதும் இல்லை. கொடுமையான எண்ணங்களை மறந்து விடுவதால் உடல் சீராகி, காற்றும் தடையின்றி ஓடிக்கொண்டிருக்கிறது.

கண்ணில்படும்  அனைத்து ஜீவராசிகளிடத்தும் அன்பாய் இருக்கின்றேன். கிடைக்கும் உணவை பகிர்ந்துண்டு, நான்  என்னை நேசிப்பது போலவே, அனைத்து மனிதர்களிடமும் அன்பாய் நடந்து கொள்கின்றேன்.  எனது உடலில் உள்ள பாகங்கள் பழுதடையாமலும் காற்றும் சீராக ஓடிக்கொண்டிருக்கிறது. மொத்தத்தில் வாழ்க்கையை ஆனந்தமாய் ஆகிக்கொண்டேன். ஆரோக்கியமான உணவு உட்கொண்டு, இவ்வயதிலும் வயல் வரப்புகளில் வேலை செய்து மகிழ்வுடன் வாழ்கின்றேன்” என்று முடித்தார்.

அவர்  என்னிடம் பேசிய அந்த  சில நிமிடங்கள் என்னை ஆச்சரியப்படுத்தி உடலை பற்றியும் வாழ்க்கையை பற்றியும் சிந்திக்க வைத்தது.

ஆமாம்! உடல், உயிரானது வந்து தங்கி செல்லும் ஓர் ஊடகம். உடலும் உடல் உறுப்புகளும், உயிருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, அதன் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. நாம் வசிக்கும் வீடானது எந்தக் குறைவுமின்றி, தகுந்த வசதியோடும், சுத்தமாகவும் இருக்கையில் மன அமைதியோடு வாழ முடிகிறது. அவ்வீட்டில் குறைகளும், வசதிகளும், சுத்தமும் அற்றுப் போய்விட்டால், வேறு வீட்டில் குடியேற முயற்சிக்கின்றோம் அல்லவா? இந்த உதாரணத்தில் வீடு என்பது உடலையும் வசிப்பது என்பது உயிரையும் குறிப்பதே!

வாழ்க்கையில் அனைத்தையும் பெற்று உயிர் வாழ்வதற்கு உடலே பிரதானம். உடல் நலம் கெட்டு துன்புறும் போதுதான் உடலின் மதிப்பு நம் எண்ணத்திற்கு வருகிறது. “உடல் ஏதோ தானாக இயங்குகிறது, வாழ்க்கையும் ஓடி கொண்டிருக்கிறது” என்ற எண்ணத்தை மாற்றி, “உடல் இதனால் தான் இயங்குகிறது, இதனால்தான் இன்னும் உயிரோடிருக்கின்றது” என்ற அறிவை நாம் பெற்றாக வேண்டும்.

நல்ல கல்வி பயின்று, பக்தி கொண்டு, அற்புதமான அறிவினையும் பெற்று, கை நிறைய சம்பாதித்து, திருமணம் செய்து, குழந்தை பெற்று, உற்றார் உறவினரிடம் நல்ல நட்பு கொண்டு, சுற்றார்களுக்கு தன்னால் இயன்றவரை உதவி செய்து, வருங்கால கனவுகளோடும் இலட்சியங்களோடும் கடமைகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கும், ஓர் 35 வயது நிரம்பிய ஒரு வாலிபர் எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவால் உடல் மறித்து விட்டால்! சற்று சிந்தித்து பாருங்கள்.

உடலின் அமைப்பையும், அது இயங்கும் விதத்தையும் நாம் அறிந்திருந்தால் மட்டுமே, உடலினுள் உயிரினை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

அறிவியல் கற்றுக்கொள்கிறோம், செல் போன் முதல் கம்ப்யூட்டர் வரை கற்றுக்கொள்கின்றோம், “இன்று உலகம் நம் சட்டை பைக்குள்” என்று வீராப்புடன் சொல்ல காரணமாய் இருக்கின்ற இன்டர்நெட்டில் நம்மை சுற்றி உள்ள அனைத்தையும் ஆராய்ந்து அறிந்து கற்றுக்கொள்கின்றோம். ஆனால் இதுநாள் வரை என்றாவது, “உடலானது உயிருடன் இருக்க ஆராய்ந்து கற்றதுண்டா?”

நமது சுகக்கேட்டிற்கு நாமே இடம் கொடுக்க வேண்டாம். உடல் என்றால் என்ன? அதனில் உள்ள உறுப்புகள் எப்படி இயங்குகின்றன? எதனால் உறுப்புகள் செயல் இழக்கின்றன? என்பதை அறிய முதலிடம் தாருங்கள்.

உடலின் அமைப்பு, அது இயங்கும் விதம் முற்றிலும் அறிந்திருத்தல் அவசியமல்லவா!

உடல் பற்றிய அறிவை நாம் நன்றாக அறியவே இந்த “உடல் ” எனும் பகுதி. தலை உச்சி முதல் பாதத்தின் நுனிவரை அனைத்தையும் ஆராய்ந்து, நம் தமிழ்-ஹெல்த்தி-லைப்.காம் இணையதளத்தில் தினமும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நம் இணையதளம், உடல் மட்டுமல்லாமல், மனம் மற்றும் வாழ்க்கை முறைகளை தீர்க்கமாக ஆராய்ந்து, விரிவாகவும் தெளிவாகவும் உலகிற்கு தெரியப்படுத்துவதுடன், உடல் சார்ந்த நோய்களுக்கு உகந்த மருத்துவ முறைகளையும், மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு கருத்துச்செரிவான ஆலோசனைகளையும் நம்பிக்கையுடன் கொடுத்து, பூரண ஆரோக்கியமான வாழ்க்கைக்குள் வழிநடத்துகிறது.

படித்துப் பயன் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்வுடன் வாழ எங்களுடைய வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *